வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Thursday, July 08, 2010

தேடுகிறேன்.....

கோட் சூட் போட்டுகிட்டு இன்று உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் அடிப்படையில் நான் ஒரு மஞ்சள் பை கிராமத்து மனிதன். இப்போது மஞ்சள் பைக்கு பதிலாக லேப்டாப் பை.... இதுதான் வித்தியாசம்:) நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடிதத படம்.... எங்கள் ஊர் நாட்டாமை என் பெரிய்ப்பா (தேவர் மகன் சிவாஜி கணேசன் மாதிரி இருப்பார்) ஸ்டைலில் பெரிய மீசை வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம்தான். அதைத்தான் என் புரொபைல் படமாக வைத்துள்ளேன். வலது பக்கம் உள்ள புகைப்படத்தில் நான் மாறி விட்டதைப்போல் எங்கள் வெட்டிக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் இந்த 25 வருடங்களில் காலச்சக்கரம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால் மாறிவிட்டன. கடந்த 2004 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட வெட்டிக்காட்டிற்கு சென்றபோது எழுதிய கவிதை!
                                                                     தேடுகிறேன்.....


பொறியியல் படித்து
அமெரிக்கா வந்து
வருடங்கள் பத்து
உருண்டோடி விட்டன!

இரண்டு வருடங்களுக்கொருமுறை
இந்தியா என்ற அட்டவணைப்படி
இன்று நான் என் கிராமத்தில்...

பத்து வருடங்களில்
எப்படியெல்லாம் மாறிவிட்டது
எனது கிராமம்!

கிட்டி, கிளி கோடு பாய்தல்
விளையாடும் சிறுவர்கள் இல்லை.
கிரிக்கெட் விளையாடும்
சிறார்கள்!

பாவாடை, தாவாணி மறந்து
சுடிதாரில் உலா வரும்
பள்ளிக்கூட மாணவிகள்!

மாட்டு வண்டி பூட்டி
மன்னார்குடி டவுன் சென்ற
மக்கள்
போகிறார்கள் இன்று
புழுதி பறக்கச் செல்லும்
சிறு பேருந்தில்!

காளைகளை ஏரில் பூட்டி
கலப்பயை கையில் பிடித்து
ஏர் உழும் காட்சிகள் இல்லை.
டிராக்டர் வைத்து
உழும் விவசாயிகள்!

முப்பது அடி கிணறு வெட்டி
முகத்தடியில் மாடுகள் பூட்டி
தண்ணீர் இறைக்கும்
காட்சிகளை காணவே முடியவில்லை.
முன்னூறு அடி
ஆழ்குழாய் கிணறு தோண்டி
மோட்டார் வைத்து
தண்ணீர் இறைக்கும் முறை!

நெற்கதிர்களை லாவகமாக
கையில் தூக்கி, கல்லில் அடித்து
கதிர் அடிக்கும் காட்சிகள் இல்லை.
இதற்கும் வந்து விட்டது
இயந்திரம்!

கோயில் திருவிழாக்களில்
அரிச்சந்திரா, பவளக்கொடி
வள்ளித் திருமணம்
நாடகங்கள் இல்லை.
திரை கட்டி காட்டப்படும்
சினிமாக்கள்!

கரகாட்டாம், மயிலாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம் இல்லை.
கோடம்பாக்கம் குமரிகள் போடும்
குத்தாட்ங்கள்!

முச்சந்தியில் கூடி
பேசி, பாடி, சிரித்து
மகிழ்ந்த மக்கள் இன்று
மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள்
தொலைக்காட்சி பெட்டி முன்பு !

காலச் சக்கரம், விஞ்ஞான வளர்ச்சி
ஏற்படுத்திய மாற்றங்கள்!
நான் மட்டும் தேடுகிறேன்.....
நான் ஓடி விளையாண்ட

என் கிராமத்தை.....?!
                     * * *


                                                                                              




11 comments:

பா.ராஜாராம் said...

எங்கு சுத்தினாலும் ஆன்மா அங்குதான் கிடக்கிறது!

கிடக்கணும்! இல்லையா? (முந்தைய இடுகைக்கும் சேர்த்துதான்)

புகை படத்தில் இருப்பது, மகளா ரவி?

Ravichandran Somu said...

பா.ரா - உண்மைதான் அண்ணே!

//புகை படத்தில் இருப்பது, மகளா ரவி?//

ஆமாம் அண்ணே. ஆறு வருடங்களுக்கு முன்பு எடுத்த படம்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கரகாட்டாம், மயிலாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம் இல்லை.
கோடம்பாக்கம் குமரிகள் போடும்
குத்தாட்ங்கள்!//

உண்மை!

இளைஞர்களின்,குழந்தைகளின் பால் நஞ்சை விதைக்கும் இந்த கலை இரவு, டான்ஸ் என்கிற பெயரில் நடக்கும் குத்தாட்டம் நிகழ்வு சமூகத்தின் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது!

நானும் ஆதங்கப்பட்டு முன்பு ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

அண்மையில் உண்மைத்தமிழன் ஒரு பதிவிட்டிருந்தார்!

இதைத் தடுக்க வேறு வழி இல்லையா?
:(

ராம்ஜி_யாஹூ said...

இதற்க்கு காராணம் , நம் கிராமத்தில் இருந்து விவசாயம் , இயற்கை சார்ந்த தொழில்களை பார்க்காமல் நாம் தான் அவசரப் பணம் தேடி அமெரிக்கா, லண்டன் என ஓடி போனது.

நாம் தான் கிராமத்தில் இருந்து நம் கிராமத்தை பாதுகாத்து இருக்க வேண்டும்.
அடுத்தவர்களிடம் தேடுவதில் லாபம் இல்லை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ராம்ஜி_யாஹூ said...
இதற்க்கு காராணம் , நம் கிராமத்தில் இருந்து விவசாயம் , இயற்கை சார்ந்த தொழில்களை பார்க்காமல் நாம் தான் அவசரப் பணம் தேடி அமெரிக்கா, லண்டன் என ஓடி போனது.

நாம் தான் கிராமத்தில் இருந்து நம் கிராமத்தை பாதுகாத்து இருக்க வேண்டும்.
அடுத்தவர்களிடம் தேடுவதில் லாபம் இல்லை
//

மூனு போகம் வெளஞ்ச ஊருல காவிரி தண்ணி இல்லாம ஒரு போகம் வெளயிறதே பெரிய காரியமா இருக்கு!

உரம்,இடு பொருள் எல்லா வற்றின் விலையையும் கணக்கில் எடுத்துதான் தஞ்சை விவசாயிகள் வேலைக்காகாது என்று வெளியேறுகிறார்கள்!

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சமுன்னு பட்டுக்கோட்டை சொன்னது போல!


வெளி நாடுகளுக்குச் செல்லாம உள் நாட்டில் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

இருப்பினும் விவசாயி மகன் விவசாயம்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவனுக்கு முடிந்தால் விமானம் கூட ஓட்டலாம்!

இந்தியாவில் மிகப்பெரிய அணு விஞ்ஞானிகளின் நிலமையே கவலைக்கிடமான நிலையில் இருக்கு!

தண்ணீர் நுழயாத தனித்தீவாக காட்சியளிக்கும் தமிழ் நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர்களை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளும் இந்திய அரசுக்காக மாடாய் உழைக்க வேண்டுமா?

மங்குனி அமைச்சர் said...

இல்லை சார் , இன்னும் சில திருவிழா விஷயங்கள் கொஞ்சம் இருக்கின்றன , (அடுத்த வாட்டி வரும்போது அதுவும் டவுட்டு தான் )

Ravichandran Somu said...

ஜோதிபாரதியாரே,

கலை இரவின் சூட்சமம் தெரியாமல் அமெரிக்காவில் இருந்த காலத்தில் நானே எங்கள் ஊரில் நடைபெற்ற ஒரு சில கலை இரவுகளை sponsor செய்திருக்கிறேன். போன வருடம் எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு “கலை இரவு” வைக்க வேண்டும் என்று என்னை அனுகியவர்களை திட்டி “மதுரை வீரன்” நாடகம் போட வைத்தேன். என்ன கொடுமை என்றால் அந்த நாடகத்திலும் பபூன்+டான்ஸ் நிகழ்ச்சியில் காது கொடுத்து கேட்க முடியாத ஆபாச வசனங்கள் :(

இந்த வருடம் எங்கள் கிராமப் பகுதிகளில் போலிஸ் “கலை இரவு”க்கு தடை விதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

Ravichandran Somu said...

ராம்ஜி_யாஹூ - நல்ல மாற்றங்கள் நமக்கு தேவை. கிராமங்களில் மாற்றம் தேவையில்லை என்று கூறவில்லை!

Ravichandran Somu said...

மங்குனி அமைச்சர் - வருகைக்கு நன்றி!

ஜோதிஜி said...

“கலை இரவு” வைக்க வேண்டும் என்று என்னை அனுகியவர்களை திட்டி “மதுரை வீரன்” நாடகம் போட வைத்தேன். என்ன கொடுமை என்றால் அந்த நாடகத்திலும் பபூன்+டான்ஸ் நிகழ்ச்சியில் காது கொடுத்து கேட்க முடியாத ஆபாச வசனங்கள் :(

இந்த வருடம் எங்கள் கிராமப் பகுதிகளில் போலிஸ் “கலை இரவு”க்கு தடை விதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

இது தான் இன்றைய கிராமம்.

பேராவூரணிப் பகுதியில் இது போன்ற ஒன்றைப் பார்த்து ஜுரம் வராத குறை.

நாடோடி இலக்கியன் said...

உண்மை.

ச‌மீப‌த்தில் உங்க‌ள் ஊருக்கு இருமுறை சென்றேன். ப‌சுமையான‌ ஊருங்க‌.


என‌து கிராம‌த்தின் இய‌ல்பை குலைத்த‌ தொலைக்காட்சியின் வ‌ருகை குறித்து சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு மூன்று ப‌குதிக‌ளாக‌ ப‌திவிட்டிருந்தேன்.

http://naadody.blogspot.com/2009/05/blog-post_06.html